தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடுவானில் சூரிய உதயம்

17 கருத்துகள்
குமரி மாவட்டத்தின் அழகான ஒரு சிறு கிராமம்தான் என் சொந்த ஊர். 8வயது வரை அந்த கிராமத்தில்தான் வளர்ந்தேன். பின்னர்தான் நகர வாழ்க்கை. அப்போது எப்போதாவது வானில் ஒரு விமானம் பறக்கும்சத்தம் கேட்டு விட்டால் போதும். எல்லா குழந்தைகளும் எங்கிருந்தாலும் தெருவிற்கு ஓடி வந்து அண்ணாந்து ஆ.... வென்று வாய் பிளந்து பார்த்து டாட்டா சொல்லுவோம். அப்போதெல்லாம் நானும் ஒருநாள் விமானத்தில் போவேன் என்று நினைத்ததில்லை. விமானத்தில் போனால் ஜன்னல் வழியாக கைநீட்டி மேகத்தைப் பிடித்து பையில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்ததுண்டு :-).

அப்படிபட்ட நான் விமானத்தில் ஏறும் நாளும் வந்தது. திருமணமாகி கணவரோடு பிறந்த வீட்டு புகுந்த வீட்டு சொந்தங்கள் புடை சூழ (சுமார் 20பேர்) எங்கள் ஊரில் இருந்து விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அழுகையுடனான விடைபெறும் படலங்கள் முடிந்து செக் இன் செய்து லக்கேஜ்கள் எல்லாவற்றையும் உள்ளே போட்ட பின் அறிவிப்பு " சிங்கப்பூர் புறப்படுவானிருந்த சில்க் ஏர் விமானம் MI497 சாங்கேதிக ப்ரஸ்னன்ங்களால் வைகி புறப்படும். புறப்படானுள்ள சமயம் பீன்னிடு அறியிக்கப்படும்"(சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர் விமானம் தொழில்நுட்ப பிரச்சினையினால் தாமதமாக புறப்படும். புறப்படும் சமயம் பின்னர் அறிவிக்கப்படும்).
விமான நிறுவனத்தின் உபயத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் தரப்பட்டது. நாங்கள் விமான நிறுவனத்தின் வாகனத்தில் புறப்பட பின்னால் மூன்று கார்களில் எங்கள் சொந்தங்கள். இருவருக்கான அறையில் 20பேர் :-(. நாங்கள் இருவரும் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டோம். பின்னே 20பேருக்கு ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றால் யார் பில் கட்டுவது. எல்லாம் முடிந்து மீண்டும் விமான நிலையத்தை நோக்கி ஊர்வலம். மீண்டும் அழுகை படலம் முடிந்து ஒரு வழியாக மாலை 3.15க்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 1.45க்கு புறப்பட்டது.

ஃப்ளைட்டில் ஏறி உட்கார்ந்ததும் பெல்ட் எப்படி போடுவது என்று தெரியவில்லை. கணவரிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நமக்குத்தான் தன்மானம் ஜாஸ்தியாச்சே :-(.
அதான் சின்ன டி வியில் படம் போட்டு காண்பிப்பானே அதைப்பார்த்து போட்டிருக்க வேண்டியதுதானேன்னு எல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது. நாங்க அதையெல்லாம் பார்ப்போமா! நாங்க யாரு பட்டிக்காட்டு பரமேஸ்வரியாச்சே! பராக்கு பார்க்கறதுக்கே நேரம் பத்தாதே! ஒருவழியா பெல்ட் போட்டுக்கிட்ட மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டு பெல்ட்டை துப்பட்டாவால் மறைத்து வைத்துக் கொண்டேன். (அதில எல்லாம் விவரமா இருப்போம்ல). விமானம் டேக் ஆஃப் ஆன போதும் பெல்ட் போடவில்லை. இறங்கும் போதும் போடவில்லை. அவ்வளவு தைரியசாலியாக்கும் நான்.

அதிலும் இந்த சீன விமான பணிப்பெண்களின் ஆங்கிலம் ஒரு இளவும் புரியவில்லை. என்னை நினைத்து எனக்கு கேவலமாக இருந்தது. இதுங்க இங்கிலிபீசையே புரிஞ்சுக்க முடியலியே இதுல அங்க இருக்கறதுங்களோட இங்கிலிபீசை எப்படி சமாளிக்கிறது நாம காமடிப் பீசாயிடுவோமோன்னு ஒரே கிலிபிடிச்சுக்கிச்சு. இதையெல்லாம் யோசிச்சு முதலிலேயே கணவரிடம் ஒரு பிட்டை போட்டு வச்சிருந்தேன். புதுசா பார்க்கறவங்கக்கிட்ட நான் அவ்வளவாக பேசமாட்டேன் அப்படீன்னு அவருக்கு வார்னிங் கொடுத்துட்டேன். அதாவது புதுசு புதுசா யாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராதீங்கனு அர்த்தம்.

இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல அனுபவம் விமானத்தில் எனக்கு காத்திருந்தது. முதல் விமானப்பயணம் என்பதால் எனக்கு தூக்கம் வரவில்லை. அதிகாலையில் மெல்ல மெல்ல விடிய தொடங்கியிருந்தது. ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டே வந்தேன். தூரத்தில் தொடுவானிலொரு ஆரஞ்சுத்துண்டு கடலிலிருந்து மெல்ல எழும்பி வந்துக் கொண்டிருந்தது. ஆஹா...அத்தனை அழகு. மெல்ல மெல்ல மேலெழும்பி சூரியன் தன்னை சோம்பல் முறித்துக் கொண்டே வெளிவந்த அழகு காணக் கண்கோடி வேண்டும். குமரிக்கரையில் இருந்து காணும் சூரிய உதயம் ஒரு அழகு என்றால் வானில் விமானத்திலிருந்து காணும் சூரிய உதயம் வேறொரு அழகு.

புதிய இடத்தில் என் புதிய வாழ்க்கை தொடங்கப்போவதை அந்த சூரிய உதயம் எனக்கு உணர்த்தியதாக நினைத்தேன். சந்தோஷமாக இருந்தது.

அதன்பின் எத்தனையோ முறை விமானத்தில் பறந்தாலும் மறுபடியும் அந்த சூரிய உதயத்தை காணும் பாக்கியம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. மீண்டும் விமானம் தாமதமாக புறப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

என்ன படிச்சுக்கிட்டு ரொம்ப மொக்கையா தோணுதா?! மொக்கை போடுறதுதான எங்க வேலையே :-). இதுக்கே பயந்துட்டா எப்படி இன்னும் ஒரு கடல் பயணத்தையும் தாண்டித்தானே நான் இருக்கும் இடத்தை அடைய முடியும். அதுக்கும் ஒரு பதிவு நடுக்கடலில் ஒரு சூரிய அஸ்தமனம் என்று இதுக்கு பார்ட் 2 போடுவோம்ல. அதையும் நீங்கதானே படிக்கணும் :-)

அன்புடன்
கவிசிவா