தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







புது பக்கத்துக்கு வந்துடுங்க ப்ளீஸ்

2 கருத்துகள்
மக்களே என்னோட புது ப்ளாக் க்கு வந்துடுங்க. பழைய ப்ளாகில் என்ன செய்தாலும் FOLLOWERS gadget சேர்க்க முடியவில்லை. அதான் புதிய ப்ளாக். வந்துடுங்க :-)

www.kavippakam.blogspot.com

இந்திய ஏர்போர்ட்டுகளில் இமிக்ரேஷன் லொள்ளு

6 கருத்துகள்

சில தினங்களுக்கு முன் "பிரியமுடன் பிரபு" வலைப்பூவில் வந்த ஒரு பதிவு... நம் இந்திய குடிநுழைவு அதிகாரிகள் (இமிக்ரேஷன் அதிகாரி) படுத்திய பாட்டைப்பற்றி நொந்து போய் எழுதியிருந்தார். அதேபோல் எனக்கும் ஒரு அனுபவம் முன்பு ஏற்பட்டது.

இந்தோனேஷியாவிலிருந்து விடுமுறைக்காக ஊர் சென்று விட்டு மீண்டும் சிங்கப்பூர் வழியாக இந்தோனேஷியா திரும்பும் போது.... திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இமிக்ரேஷன் அதிகாரி என்னை அனுமதிக்க மறுத்தார். அதுக்கு அவர் சொன்ன காரணம் என்னிடம் ரிட்டர்ன் டிக்கெட் இல்லை என்பதுதான். நான் இந்தியாவுக்கு விடுமுறை வந்துட்டு மீண்டும் திரும்பி போரேன் என்கிட்ட எப்படி டிக்கட் இருக்கும்னு கேட்டா அதெல்லாம் எனக்கு தெரியாது ரிட்டன் டிக்கெட் இல்லை அனுமதிக்க முடியாதுன்னுட்டார். என்னிடம் இருக்கும் விசாக்களை காண்பித்த போதும் எதையும் கேட்கும் மூடில் அவர் இல்லை.

திருப்பி திருப்பி அவர் சொன்னது நீங்க சிங்கப்பூர் போரீங்க. சிங்கப்பூருக்கு உங்களுக்கு விசிட் விசா மட்டும்தான் இருக்கு. அதனால ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம அனுமதிக்க முடியாதுன்னு சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கிட்டு இருந்தார். என்னிடம் சிங்கப்பூருக்கான multiple entry business visit visa வும் இந்தோனேஷியாவுக்கான stay permit ம் இருந்தது.

அவரிடம் இரண்டையும் காட்டி சிங்கப்பூர் வழியாகத்தான் நான் இருக்கும் இந்தோனேஷிய தீவுக்கு போக முடியும். எனக்கு சிங்கப்பூருக்கு எண்ட்ரி விசாவும் இருக்கு இந்தோனேசியாவுக்கு ஸ்டே பெர்மிட்டும் இருக்கு அப்புறமும் என்ன பிரச்சினைன்னு கேட்டா உடனே சிங்கப்பூர் டூ இந்தோனேசியா கனெக்டிங் ஃப்ளைட் டிக்கட்ட காமிங்கன்னாரு.

அவரிடம் சிங்கப்பூரிலிருந்து ஃப்ளைட் இல்ல ஃபெரியில் போகணும்னு சொல்லி ஃபெரி டிக்கெட்டையும் காமிச்சேன். (நல்ல வேளையாக ஃபெரி டிக்கெட் வைத்திருந்தேன். சாதாரணமாக இங்கு ஃபெரி ஏறும் முன் நாம் பஸ் டிக்கட் எடுப்பது போல் எடுப்பதுதான் வழக்கம்)

டிக்கெட்டில் ஃப்ளைட் டிக்கெட் போல் தேதி நேரம் எல்லாம் குறிப்பிடப் பட்டிருக்காது. ஃபெரி டெர்மினலில் போய் புக் செய்து கொள்ளலாம். அல்லது இணையம் மூலம் புக் செய்யலாம் அதுவும் 3நாட்களுக்கு முன்புதான் செய்ய முடியும். டிக்கெட்டை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார்.

மீண்டும் சந்தேகம்... டிக்கெட்டில் தேதி ஒண்ணும் இல்லை டிக்கட் கன்ஃபார்ம் ஆகும்னு நான் எப்படி நம்பறதுன்னார். அங்கு போய்தான் புக் செய்ய முடியும். அரைமணி நேரத்துக்கு ஒரு ஃபெரி இருப்பதால் முன்கூட்டியே புக் செய்ய அவசியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எனக்கு தெரியாது கன்ஃபர்ம் டிக்கட் இல்லாம அனுப்ப முடியாதுன்னு அடம் புடிச்சார். அதுவரை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்த எனக்கு கோபம் வந்துடுச்சு.

பாஸ்போர்ட்டை வாங்கி பழைய ஸ்டாம்பிங்குகளையெல்லாம் அவரிடம் காண்பித்து ஒருமாசத்துல நாலு தடவையாவது சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில பயணம் செய்துக்கிட்டு இருக்கேன். அங்கயெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல. இங்க மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை? இத்தனைக்கும் என் பாஸ்போர்ட்டில் ECNR ஸ்டாம்பிங் இருக்கு. பொறியியல் பட்டதாரின்னு இருக்கு. அப்புறமும் ஏன் இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு இவ்வளவு பிரச்சினைன்னு கத்த ஆரம்பிச்சதும் இன்னொரு அதிகாரி வந்து தலையிட்டு எல்லாவற்றையும் க்ளியர் செய்து அனுப்பினார்.

இப்போ ஃபெரி டிக்கெட் கையில் இல்லாமல் நான் இந்தியாவுக்கு போவதே இல்லை :-)

இந்தியாவுக்குள் நுழையும் போதும் பிரச்சினைதான். வர்ற ஃபாரினரிடம் வழிந்து எதுவும் பேசாமல் ஸ்டாம்பிங் குத்தி அனுப்பிவிட்டு நம்மிடம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கேள்வி.

என் மாமனார் இறந்து நாங்கள் எல்லோரும் அழுது துடித்து ஊருக்கு வரும் போது இந்த அதிகாரிகள்படுத்திய பாடு... அழுதழுது முகம் வீங்கின எங்களைப்பார்த்து சகபயணிகள் எங்களை க்யூவில் நிற்க வேண்டாம் என அவர்களே முன் வந்து முதலில் அனுப்பினாங்க. இமிக்ரேஷன் அதிகாரியும் பிரச்சினை செய்யவில்லை. ஆனால இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்... இமிக்ரேஷனில் அந்த எம்பார்க்கேஷன் கார்டில் ஸ்டாம்ப் செய்து ஒரு சிறிய ஸ்லிப் தருவார்கள். அதை பதட்டத்தில் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்பிங் செய்த பக்கத்தில் இருந்து எடுத்து கஸ்டம்ஸ் அதிகாரியிடம் பாஸ்போர்ட்டோடு கொடுத்து விட்டோம். அதற்கு அந்த அதிகாரி ஏதோ நாங்கள் உலக மகா குற்றம் செய்தது போல் கத்தி மீண்டும் ஸ்டாம்பிங் பக்கத்தை தேடி அதில் அந்த ஸ்லிப்பை வைத்து தர கத்தினார். அப்படி வைத்து கொடுத்த போது அந்த பக்கத்தை திறந்து எதையுமே பார்க்காமல் அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்துக் கொண்டார். இதைத்தானே நாங்கள் ஸ்லிப்பை மட்டும் எடுத்து கொடுத்தோம். எதற்கு கத்தினார் என்பது புரியாத புதிர். அன்று கேள்வி கேட்கும் மனநிலையில் கூட நாங்கள் இல்லை.

இமிக்ரேஷன் ஆஃபீசர் கஸ்டம்ஸ் ஆஃபிசர்னா பெரிய கொம்பன்னு நினைப்பு. எல்லாத்தையும் முறையா செய்து போறவங்ககிட்டதான் இவனுங்க ஜம்பம் எல்லாம். தீவிரவாதியை மட்டும் கரெக்டா ஃப்ரீயா விட்டுடுவானுங்க!

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்

10 கருத்துகள்



"டெலிஷாப்பிங் செய்யலாமா" பதிவு போட காரணமே பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு டெலிஷாப்பிங் விளம்பரத்தில் மயங்கி ஒரு பொருளை வாங்கி நொந்து போனதால்தான் :-(

அப்போது நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். டெலிஷாப்பிங் விளம்பரத்தில் ஒரு வெஜிடபிள் கட்டருக்கான விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் அது காய் வெட்டும் அழகில் மயங்கி விட்டேன். அந்த வயதில் வரவேண்டிய காதல் மயக்கத்திற்கு விழாமல் அல்ப விளம்பரத்தில் விழுந்துட்டேன் :-(

என் அப்பாவிடம் அடம் பிடித்து எனக்கு அது வேனும்னு சொல்லி அடம்பிடித்து டெலிஷாப்பிங் நிறுவனத்திற்கு போன் செய்து விட்டேன். போன் செய்த அரைமணி நேரத்தில் பொருளும் வீட்டுக்கு வந்து விட்டது. விலை 600ரூபாய்.

அன்றைய சமையல் நாந்தான் செய்வேன்னு சொல்லி அம்மாவுக்கு அன்று கிச்சனில் இருந்து ரெஸ்ட் கொடுத்து விட்டேன். காஷ்மீரி புலாவ் செய்யப்போகிறேன் என்று கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர் வெங்காயம் எல்லாம் தயாராக எடுத்தாச்சு

அடுத்து புது வெஜிடபிள் கட்டரில் காய் வெட்டும் படலம். வெஜிடபிள் கட்டரை மேடையில் ஃபிக்ஸ் செய்ய நினைச்சு அதுக்குள்ள நாபை திருகினால் கட்டர் வெட்கத்தில் நழுவி நழுவி ஓடியது. இது என்னடா கவிக்கு வந்த சோதனைன்னு மேனுவலை எடுத்து படிச்சா கட்டர் வழவழப்பான தரையில் மட்டும்தான் ஒட்டுவாங்களாம். மற்ற தரைன்னா அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.

சரின்னு ஒரு மைக்கா ஒட்டிய ஸ்டூலில் ஃபிக்ஸ் செய்தாச்சு. இப்போ கட்டரின் மேல் பாகத்தை கழற்றணும். அதைப்பிடித்து திருகினா அது வருவேனான்னு அடம் பிடிச்சுது. ஒருவழியா அந்த ரகசியத்தையும் கண்டுபிடிச்சு (பொண்ணுங்க மனசுல மட்டும்தான் ரகசியம் இருக்கணுமா எனக்கும் இருக்கும்ல அப்படீன்னு அது என்னைப் பார்த்து சிரிச்ச மாதிரியே இருந்துச்சு) மேல்பாகத்தை கழற்றியாச்சு.

அடுத்து ப்ளேட் ஃபிக்ஸ் செய்யணும். அதுக்கும் அந்த பாழாப்போன கட்டர் ஒரு ரகசியம் வச்சிருந்தது. குறிப்பிட்ட ஆங்கிளில் வச்சா மட்டும்தான் பொருந்துவேன்னு அடம்புடிச்சுது. அதையும் கண்டு புடிச்சு போட்டு திரும்பவும் மேல்பாகத்தைக் கொண்டு மூடி...

கேரட்டை வச்சு இடது கையால் புடிச்சுக்கிட்டு வலது கையால் ஹேண்டிலை பிடிச்சு
சுழற்றினா... ஹேண்டிலை சுற்ற காலையில் இன்னும் ரெண்டு இட்லி கூடுதலா சாப்பிட்டிருக்கணும். என் பலம் முழுவதும் கொட்டி ஹெண்டிலைச் சுற்றி சுற்றி கேரட்டை வெட்டி முடித்தேன்.

நான் சமையல் செய்ய ஆரம்பித்து ஏறக்குறைய 45நிமிடம் ஆயிடுச்சு. என் அண்ணன் இவ இந்த லட்சணத்துல காய் வெட்டுனா நமக்கு லன்ச்சுக்கு பதில் டின்னர்தான் செஞ்சு போடுவான்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தார். எங்க அப்பா கவி கஷ்டமா இருக்குதானு கேட்டார். ஆமான்னு சொல்ல மனசு இடம் கொடுக்கலை. நாம் சொல்லி அப்பா வாங்கிட்டார். சரியில்லேன்னு சொன்னா நமக்கு கேவலமாச்சே! இல்லப்பா புதுசுல்ல அதான் இப்படி இருக்கு பழகினா சரியாயிடும்னு சொல்லி சமாளிச்சேன்.

ஒருவழியா எல்லாத்தையும் அதிலேயே வெட்டி அருமையா காஷ்மீரி புலாவும் செய்து விட்டேன். அடுத்து கட்டரை க்ளீன்செய்யும் வேலை...

ஒவ்வொரு பார்ட்டையும் கழற்றி கழுவி காயவைத்து மீண்டும் அதை எடுத்து வைத்து...

அன்று மூட்டை கட்டி ஸ்டோர் ரூமில் வைத்ததுதான்... இன்னிக்கும் எனக்காக அங்கேயே காத்துகிட்டு இருக்கு. எங்க அப்பா அதைப் பார்த்து இத எடுத்துக்கோயேண்டான்னு சொல்லும் போதெல்லாம்...இருக்கட்டும்பா நான் இந்தியாவில் வந்து செட்டிலாகும் போது எடுத்துக்கறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு வரை நான் ஏமாந்துட்டேன்பான்னு அப்பாகிட்ட சொல்லலை :-). ஆனா அது மட்டும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நல்லா ஏமாந்தியான்னு கேட்கிற மாதிரியே இருக்கு :-(

ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. அது எப்படி விளம்பரத்தில் நடிக்கறவங்க மட்டும் இதில் ரொம்ப ஈசியா வெட்டுராங்க?

டெலிஷாப்பிங் செய்யலாமா?!

8 கருத்துகள்
எப்போ டிவி பொட்டியை திறந்தாலும் ஏதாவது ஒரு சேனலில் ஒரு வெள்ளைக்கார தாத்தாவும் பாட்டியும் தமிழில் பேசி நம்ம தலையில் மிளகாய் அரைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

வெள்ளைக்கார பாட்டி: இவர்கிட்ட இருப்பது சாதாரண கரண்டி. என்னிடம் இருப்பதோ சூப்பர் பவர் கரண்டி!

சாதாரண கரண்டியால் சமைப்பவர்: சே இந்த கரண்டியால் என்னால் எதுவுமே கிண்ட முடியலை. அல்வா கிண்டினா அகப்பையில் ஒட்டாம சட்டியிலேயே ஒட்டிக்குது. சே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!

வெ.கா.பா: ஆஹா இந்த கரண்டியால் கிண்டுவது எவ்வளவு சுலபம். சும்மா தொட்டாலே போதும் தானே கிளறும். எவ்வளவு சுலபம்!

சா.க.ச: ஆஹ்! என்ன ஆச்சரியம். எவ்வளவு சுலபமா இருக்கு

வெ.கா.பா : ஆமா சுலபம்தான். பழைய கரண்டியெல்லாம் தூக்கிப் போட்டுடுங்க. சூப்பர் பவர் கரண்டியால் அல்வா கிண்டினால் அல்வா சட்டியில் ஒட்டாது. உங்கள் வாயிலும் பையிலும் மட்டுமே ஒட்டும்.

பின்னணியில் ஒரு பெண் குரல்: இதோட விலை வெறும் 9999 ரூபாய் மட்டுமே! இந்த எண்ணில் முதலில் தொடர்பு கொள்பவர்க்கு சூப்பர் பவர் கரண்டியோடு அதை பூட்டி வைப்பதற்கான பெட்டியும் இலவசம். இந்த இரண்டு பொருட்களின் விலை வெறும் 9999 ருபாய் மட்டுமே!

(பின்னே இவ்வளவு விலை கொடுத்து வாங்கி அதை உபயோகிக்க முடியும்னு நினைக்கறீங்க! அதனாலதான் பத்திரமா பூட்டி வைக்க பெட்டியும் தர்றாங்க)

இதையே அந்த அரை மணிநேரமும் திரும்ப திரும்ப சொல்லி நம்மளை கொல்லுவானுங்க இந்த வெள்ளைக்காரனுங்க!

இதைப்பார்த்த நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா?! நாங்களும் எங்க ஸ்டைலில் களத்துல குதிப்போம்ல அப்படீன்னு குதிச்சுட்டாங்க. ஆனா அவனுங்களை மாதிரி கரண்டியும் ஜூசரும் வித்தா எங்க மரியாதை என்னாவறது. நாங்க வெறும் கயிறையே மந்திரக்கயிறுன்னு வித்துட மாட்டோமான்னு ரவுசை ஆரம்பிச்சுட்டாங்க.

பெண்: என் கணவர் நல்லா கள்ளச்சாராய வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தார். திடீர்னு போலீஸ் ரெய்டு அது இதுன்னு வியாபாரம் நொடிச்சு போயிடுச்சு. அப்போதான் என் ஃப்ரெண்ட் இந்த கயிறு பத்தி சொன்னா. வாங்கி சாராய பானையை சுற்றி கட்டியதும் ....

என்ன ஆச்சரியம் இப்பல்லாம் போலீஸ் ரெய்ட் வருவதே இல்லை. தண்ணியை கொதிக்க வச்சாலும் அது சாராயமா மாறிடுது. வியாபாரமும் கொடிகட்டி பறக்குது. எல்லாவற்றிற்கும் மந்திர கயிறுதான் காரணம்

பின்னணி குரல்: இந்த மந்திரக்கயிறு இமயமலையில் உள்ள பனியை கயிறாக திரித்து உருவாக்கப்பட்டதால் அற்புத சக்தி வாய்ந்தது. இதை உங்கள் வீட்டில் வைத்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். மண்சட்டி பொன்சட்டியாக மாறிவிடும். இந்த அற்புத மந்திரக்கயிறின் விலை வெறும் 4999ரூபாய் மட்டுமே.

உண்மையிலேயே மக்கள் இதெல்லாம் வாங்கறாங்களா?! எல்லா சேனலிலும் அரைமணிநேரம் ஓடுகிறது. இதற்கெல்லாம் பணம் கிடைக்கும் அளவு வியாபாரம் இருந்தால்தானே இது சாத்தியம்.

இதையெல்லாம் இன்னமுமா மக்கள் நம்பறாங்க! இவனுங்க நம்மளை லூசுன்னு நினைக்கறானுங்களா இல்லை அவனுங்கதான் மெய்யாலுமே லூசா?! சகோஸ் நீங்களே சொல்லுங்களேன்.

புதிய மொழி கற்றுக்கொள்ள எளிய வழி(ஆண்களுக்கு மட்டும்)

6 கருத்துகள்
அடுத்த மொக்கைக்கு ரெடியாகுங்கோ :-)

என்னவரோடு சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து ஒருவழியாக நாங்கள் இருக்கும் தீவுக்கு வந்து சேர்ந்தோம். இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் மிக மிக குறைவு இல்லை இல்லை மிக மிக அரிது.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அன்னிக்கு இரவு என்னவரின் பாஸ் வீட்டுக்கு போனோம். அங்க இருந்த மெய்ட் வயதான ஒரு அம்மா.பல வருடங்கள் என்னவருக்கும் அவருடன் வேலை
பார்ப்பவர்களுக்கும் சமைத்து கொடுப்பவர். அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே எல்லாரும் நடத்துவாங்க. அவரிடம் "இனி இஸ்திரி கு" ன்னு ஏதோ சொன்னார். எனக்கோ தூக்கி வாரி போட்டுடுச்சு என்னடா நம்மளைக்காட்டி ப்ளாஸ்திரி இஸ்திரி பொட்டின்னு என்னவோ சொல்றாறேன்னு குழப்பம். நம்மாளு நான் குழம்பறதை பார்த்து ரசிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தார். மற்றவர்களும் இருந்ததால் நானும் எதுவும் கேக்கலை. நம்மளை வச்சு ஏதோ காமடி பண்றாரோன்னு நினைச்சுக்கிட்டேன். எப்படியும் நம்மக்கிட்ட மாட்டாமலா போவாருன்னு அப்போ வச்சுக்கலாம்னு மனசை தேத்திக்கிட்டேன்.

வீட்டுக்கு வந்தபின் என்ன சொன்னீங்கன்னு கேட்டா நீயே எப்படியாவது கண்டு பிடிச்சுக்கோன்னுட்டார். எனக்கு ரோஷம் வந்திடுச்சு. உங்க உதவி இல்லாம நான் இந்த மொழியை கத்துக்கறேன்னு சவால் விட்டுட்டேன். உள்ளுக்குள் உதறல்தான் :-). ஆனாலும் நமக்கு வீண் ஜம்பத்துக்கு சொல்லியா கொடுக்கணும்?!

அடுத்த நாள் காலையில் இவர் வேலைக்கு போயிட்டார். எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் மெய்ட் வந்தார். "இஸ்திரி சிஃபா யா?" ன்னு ஏதோ கேட்டார். ஆஹா எல்லாரும் சேர்ந்து நம்மளை இஸ்திரி பொட்டியாக்கிட்டாங்களேன்னு நொந்து போயிட்டேன். அன்னிக்கு மெய்ட் கிட்ட நல்லா கையை காலை ஆட்டி சைகை பாஷையில் பேசினேன். ஒருவழியா மெய்டும் சைகை பாஷையில் இஸ்திரின்னா மனைவி ன்னு அர்த்தம்னு சொல்லி புரிய வச்சுட்டாங்க. அடப்பாவிங்களா எங்கூருல அந்த காலத்துல ஸ்த்ரீன்னு சொல்றதைத்தான் நீங்க இஸ்திரின்னு கொன்னுட்டீங்களான்னு நினைச்சுக்கிட்டேன்.

சரி மனைவிக்கு இஸ்திரி, கணவருக்கு என்ன சொல்லனும்னு அவங்ககிட்டயே சைகையில் கேட்டேன். "சுவாமி" ன்னு சொல்லணும்னு சொன்னாங்க. ஆஹா இந்த பாஷை மொத்தமும் காப்பி போலத்தானோன்னு தோணுச்சுது! அவங்கக்கிட்டயே நம்பர்ஸ் மற்றும் சில அடிப்படை வார்த்தைகள்கள் கத்துக்கிட்டேன். இந்த பாஷையின் எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் என்பதால் வாசிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனாலும் எழுத்துக்களின் ஒலியில் வித்தியாசம் இருப்பதால் கரெக்டாக உச்சரிப்பதில் பிரச்சினை. ஆனாலும் கண்ணில் பட்டதையெல்லாம் வாசிப்பேன்.

வாட்டர் பாட்டிலில் "Air minum" அப்படீன்னு எழுதி இருந்தது. உடனே எனக்கு மண்டையில் பல்ப் எரிஞ்சுட்டுது. "ஏர் மைனம்" னா தண்ணீர் அப்ப்டீன்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் என் மேதாவித்தனத்தை மெய்டிடம் காட்ட அவரிடம் வாட்டர் பாட்டிலை காட்டி "ஏர் மைனம்" அப்படீன்னேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஐர் மினும்" அப்படீன்னாங்க. இப்போ நான் திரு திருன்னு முழிச்சேன். என் மெய்ட் ரொம்ப புத்திசாலி (அது எப்படி கவி எல்லாரும் உன்னைவிட புத்திசாலியாவே இருக்காங்க!). நான் முழிக்கறதை பார்த்ததுமே ஒவ்வொரு வார்த்தையிலும் கை வைத்து "ஐர்" "மினும்" அப்படீன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதோட நிறுத்தாம தண்ணீரை ஒரு கப்பில் ஊற்றி
"ஐர்" அப்பட்டீனு சொல்லி "மினும்" னு சொல்லி குடிச்சு காமிச்சாங்க. ஐர் னா தண்ணி மினும் னா குடி அப்படீன்னு புரிஞ்சுது. இதத்தானே எங்க ஊர் ரெயில்வே ஸ்டேஷனில் குடி தண்ணீர்னு எழுதி பக்கத்துலயே ஒரு கப்பை செயினால் கட்டிப் போட்டிருப்பாங்க. இதுக்குத்தானா இம்புட்டு அலப்பறை அதையும் தலைகீழா சொல்லிப்புட்டு அப்படீன்னு மனசுக்குள்ளயே கறுவிக்கிட்டேன்.

என் கணவரின் நண்பர் முப்பது நாட்களில் ஹிந்தி புத்தகம் போல் பஹாஸா இந்தோனேசியா பேசுவது எப்படீன்னு ஒரு புத்தகம் கொடுத்தார். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை :-(. இப்படியே போனா சைகை பாஷைதான் நல்லா கத்துக்குவேன்னு மட்டும் புரிஞ்சுது. உடனே ஒரு பஹாசா இந்தோனேசியா-ஆங்கிலம், ஆங்கிலம்-பஹாசா இந்தோனேசியா அகராதி வாங்கி வைத்துக் கொண்டேன்.

தினமும் அதைப்பார்த்து புதிய புதிய வார்த்தைகளாக படித்தேன். வாசலில் யார் வந்தாலும் அவர்கள் பேசுவதைக் கேட்டு டிக்ஷ்னரியில் அர்த்தம் தேடி அதற்கு பதில் சொல்ல மீண்டும் டிக்ஷ்னரியில் வார்த்தை தேடி பதில் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொழியைக் கத்துக்கிட்டேன். இப்போ ஓரளவு நல்லாவே பேசுவேன். ஆனால் என்ன சைகை பாஷைதான் மறந்து போச்சு :-( .

இந்த பாஷை கற்றுக் கொள்ள எளிதுதன். ஏன்னா கிராமர்னு ஒண்ணு கிடையவே கிடையாது. கொஞ்சம் தமிழ் கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் டச்சு மொழி எல்லாம் கலந்ததுதான் இந்த மொழி. என்ன நாம் பேசறதை கொஞ்சம் ரிவர்சில் பேசணும் அவ்வளவுதான். இங்கே திரும்புன்னு சொல்லணுமான திரும்பு இங்கேன்னு சொல்லணும் அவ்வளவுதான். நம்பர்ஸ் எழுதும் போது புள்ளி வக்கிற இடத்தில் "கமா" போடனும் கமா போடற இடத்தில் புள்ளி வைக்கணும். இப்படி எல்லாத்தையும் தலைகீழாத்தான் செய்யணும் (-:.

இப்படி நான் கஷ்டப்பட்டு இந்த பாஷையை கத்துக்கிட்டா... என்னவரிடமும் அவரது இந்திய நண்பர்களிடமும் நீங்கள்லாம் எப்படி சீக்கிரமா கத்துக்கிடீங்கன்னு கேட்டா குறும்பா சிரிச்சுக்கிட்டு ஒரு பதில் சொன்னாங்க பாருங்க....நான் கண்ணாலயே என்னவரை
பொசுக்கிட்டேன். "ஹி..ஹி... இங்க வந்த உடனேயே ஒவ்வொருத்தரும் கம்பெனியில்
உள்ள பொண்ணுங்களை ஆளுக்கொண்ணா பிடிச்சு கேர்ள் ஃப்ரெண்டாக்கிட்டோம். சீக்கிரமா கத்துக்கிட்டோம்" இதுதான் அவங்க சொன்ன பதில்.

அடப்பாவிங்களா கேர்ள் ஃப்ரண்ட் வச்சுக்கறத்துக்கு இப்படீல்லாமா காரணம் கண்டுபுடிப்பீங்க!

காதலர் தினத்தில் கிடைத்த அன்பு

6 கருத்துகள்
கல்லூரியில் சேரும் வரை வேலன்டைன் டே அப்படீன்னு ஒன்னு இருக்கறதே எனக்கு தெரியாது :-(. அம்புட்டு பொது அறிவு நமக்கு :-). முதலாம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிதான் அடுத்த நாள் வேலன்டைன் டே என்ற பேச்சு கல்லூரி முழுக்க எல்லாரும் பேசிக்கிட்டாங்க . என் வகுப்புத்தோழியிடம் அப்பாவியாக வேலன்டைன் டேன்னா என்னான்னு கேட்டேன். அடிப்பாவி இது கூடவா தெரியாதுன்னு அற்பமா ஒரு பார்வை பார்த்தா பாருங்க... ஒரு புழுவைப்போல் நெளிய வச்சுட்டா. அப்புறம் சொன்னா நாளைக்கு லவ்வர்ஸ் டே அதைத்தான் அப்படி சொல்றாங்க அப்படீன்னா. அப்படியா அப்படீன்னா நாளைக்கு நமக்கு வேலையில்லன்னு போயிட்டேன்.

அதுக்கப்புறம் லவ்வர்ஸ் டே பற்றி வித விதமான செய்திகள்(வதந்திகள்) உலா வந்தன. பேனா பரிசாக கொடுத்தா காதலன் பிரிஞ்சு போயிடுவான். கர்ச்சீஃப் கொடுத்தா காதலி உன்னை கைகழுவிட்டு கர்ச்சீஃப்ல கை துடைச்சுக்குவா. மஞ்சள் ரோஸ் தலையில் வச்சுக்கிட்டா இன்னும் ஃப்ரீயாத்தான் இருக்கேன். ரெட் ரோஸ் வச்சுக்கிட்டா ஏற்கெனவே ஆள் இருக்கு. வெள்ளை ரோஸ் வச்சுக்கிட்டா காதல் முறிஞ்சு போயிடுச்சு அப்பட்டீன்னு அர்த்தம்ம்னு ஒவ்வொன்னுக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டு ஒரு கூட்டம் அலைஞ்சுது அப்புறம் ஒவ்வொரு கலர் ட்ரெஸுக்கும் ஒவ்வொரு அர்த்தம்னு சொல்லி அடுத்த நாள் என்ன கலர் ட்ரெஸ் போடறதுன்னு மண்டையை சொறிய வச்சிட்டு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு திரிஞ்சுது. இதையெல்லாம் கேட்டு எங்கள் ஐவர் அணி தோழிகள் பட்டாளத்துக்கு ஒரே குழப்பம். ஏன்னா எங்களில் யாருக்கும் அதுவரை காதலும் இல்லை. இனிமேல் கல்லூரியில் யாரையும் காதலிக்கும் எண்ணமும் இல்லை.

எந்த கலரில் ட்ரெஸ் போட்டாலும் அதுக்கு வில்லங்கமான அர்த்தம் இருக்குன்னு வேற ஒரு கூட்டம் திரிஞ்சுக்கிட்டு இருந்ததா... நாங்களெல்லாம் கூட்டம் போட்டு ஏகமனதாக ஒரு முடிவு செய்தோம். கறுப்பு கலர் சுடிதார் போட்டு சிவப்பு நிற ரோஜாவை தலையில் வைத்து செல்வதென முடிவு செய்தோம். அதாவது பசங்களை குழப்பறதா எங்களுக்கு நினைப்பு. என்ன பண்றது எப்பவுமே நெனப்புதானே பொழப்ப கெடுக்கறது
சரி சுடிதார் பிரச்சினை இல்லை. கறுப்பு நிற சுடிதார் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் சிவப்பு நிற ரோஸ் வேண்டுமே! சிவப்பு ரோஜா கிடைப்பது அன்று குதிரை கொம்பாக இருந்தது. இந்த பசங்க மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டானுங்கன்னு எங்க காலேஜ் பக்கம் பூக்கடை வச்சிருக்கற அக்கா கையை விரிச்சுட்டாங்க :-). ஒரு ரோஜாக்கு 20ரூபாய் கொடுப்பதாக இருந்தால் அடுத்த நாள் காலை கொண்டு வந்து தருவதாக சொல்லி எங்கக்கிட்ட அக்கா நால்லாவே வியாபாரம் செய்துட்டாங்க. பின்னே பிசினஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ் இருக்கும் கல்லூரியின் வாசலில் கடை வச்சிருக்கற அக்காவுக்கு இந்த வியாபார தந்திரம் கூடவா தெரியாது.

லவ்வர்ஸ் டேயும் விடிந்தது. வீட்டிலிருந்து கறுப்பு சுடிதார் போட்டுக்கிட்டு போய் கல்லூரிப் பேருந்தில் ஏறினால் முக்கால் வாசி புள்ளைகளும் மஞ்சள் சுடிதாரும் முக்கால் வாசி பசங்களும் மஞ்சள் ஷர்ட்டும் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. ஏற்கெனவே ஜோடி சேர்ந்தவங்க மட்டும் சிவப்பு ட்ரெஸ் போட்டு சிவப்பு ரோசை தலையில் வைத்து பந்தா காட்டிக்கிட்டு நல்லா கடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. மஞ்சள் மங்கம்மாக்களும் மஞ்ச சட்டை ராமராஜன்களும் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க... அய்யோ இவ்வளவு சின்ன வயசுலயே காதல் தோல்வியா பாவம் புள்ளன்னு ஒரு பரிதாப பார்வை வீசிட்டு தனக்கேத்த ஜோடியை தேட ஆரம்பிச்சுட்டாங்க. மனதுக்குள் சிரித்துக் கொண்டு அப்பாவியாக சீட்டில் உட்காந்துகிட்டு யார் யாருக்கு நூல் விடறாங்கன்னு நோட் பண்ணிக்கிட்டு இருந்தேன் :-)

இப்படியாக அன்னிக்கு எல்லோரும் ஏதோ திருவிழாவிற்கு போவது போல் காலேஜ் போய் சேர்ந்தோம். பூக்கார அக்கா சொன்ன மாதிரியே சிவப்பு ரோஜா கொண்டு வந்து கொடுத்திட்டாங்க. ஜோரா தலையில் வச்சுக்கிட்டு க்ளாசுக்கு போயாச்சு.

மாணவமணிகள் இப்படி ஜாலி மூடில் காலேஜுக்கு வர ஆசிரிய மணிகள் எல்லாம் கொலை வெறியில் இருந்தார்கள். எந்த மாணவி தலையில் சிவப்பு ரோஜா இருந்தாலும் அவர்களை கொத்திவிடுவது போலவே முறைத்தார்கள். வேற ஒன்னும் இல்லை நாம படிக்கிற போது இதெல்லாம் இல்லியேங்கற வயித்தெரிச்சல்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆனால் எங்கள் டீமை பார்த்ததும் குழம்பிட்டாங்க! ஹேய் சக்சஸ்னு மனசுகுள்ளயே சொல்லிக்கிட்டு அப்பாவியா கிளாசுக்கு போயிட்டோம். எங்கள் மேத்ஸ் மேடம் க்கு மட்டும் என்ன தோனுச்சுன்னு தெரியலை எங்க அஞ்சு பேரையும் கூப்பிட்டு என்ன தலையில் ரெட் ரோஸ் கறுப்பு சுடிதார்னு கேட்டாங்க. எங்களுக்கோ அவங்களைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏன்னா அவங்க கறுப்பு சேலை உடுத்தி தலையில் ஒரு சிவப்பு ரோஜா வச்சிருந்தாங்க :-). சும்மா பசங்களை குழப்பத்தான் இப்படீ அப்படீன்னு மேடத்துக்கிட்ட சொன்னதும் மேடம் சிரிச்சுட்டாங்க. எங்களில் இருந்த குறும்புக்கார தோழி மேடம் நீங்க ஏன் மேடம் கறுப்பு சேலை சிவப்பு ரோஜான்னு வந்திருக்கீங்க சார் மேல என்ன கோபம் அப்படீன்னு கேட்டா(மேம் க்கு அந்த வருடம்தான் திருமணம் ஆகியிருந்தது). அடிப்பாவிங்களா குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மா இப்படி காம்பினேஷனுக்கு ஏதோ அர்த்தம் இருக்கு போல இருக்கேன்னு உங்க ஐவர் அணியை பார்த்ததும்தான் தெரிஞ்சுது. நாம வேற அந்த காம்பினேஷன்ல வந்திருக்கோமே ஏதோ வில்லங்கமான அர்த்தமா இருக்குமோன்னு தெரிஞ்சுக்கதான் உங்களைக் கூப்பிடவே செய்தேன்னு சொல்லி சிரிச்சாங்க. அதுக்கப்புறம் மேம் மின் செல்லக்குழந்தைகளாகி விட்டோம். இப்படி காதலர் தினம் எங்களுக்கு ஆசிரியையின் அன்பைப் பெற்றுத் தந்தது.


காதலர் தினத்துக்கு மொக்கை போடாட்டி நமக்கு தூக்கம் வராதேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ நிம்மதியா இருக்கு இனிமே என்னவரோடு வேலன்டைன் சந்தோஷமா கொண்டாட போகலாம் :-)

திருப்பதி பாலாஜியின் தெய்வீகப் படங்கள்

4 கருத்துகள்
திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் வைகுண்ட ஏகாதசி படங்கள் எனக்கு மெயிலில் வந்தது. படங்கள் மிக மிக அழகு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கோவிந்தரின் தெய்வீக புன்னகை




ஸ்ரீ பாலாஜியின் தாமரைப் பாதங்கள்




ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாச கோவிந்தா




ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணசந்திரா

அருவருப்பூட்டும் சீனத் தயாரிப்புகள்

2 கருத்துகள்
சமீபத்தில் எனக்கு மெயிலில் வந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி. சைனாவில் இருந்து இறக்குமதியாகும் பல பொருட்களிலும் கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருப்பது நாம் அறிந்ததே! ஆனால் இந்த செய்தி அருவருப்பு அளிக்கிறது.

பெண்கள் தலையில் அணியும் ரப்பர்பேண்டுகளில் உள்ள பொருள்தான் அருவருப்பூட்டும் விஷயம். ஆம் உபயோகப்படுத்தப்பட்ட காண்டம்களை ரப்பர்பேண்ட் தயாரிப்பில் பயன் படுத்துகிறார்கள். உவ்வ்வ்...வே. குழந்தைகள் வாயில் வைத்து விளையாடினால் என்னாவது?! எவ்வளவு ஆபத்து?!
படங்களைப் பார்த்தால் நன்கு புரியும் பாருங்கள்!










அதே போல் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செருப்புகள்! அவற்றால் ஏற்படும் பாதிப்பையும் பாருங்கள்.




இப்பொருட்கள் மொத்தமாக மலிவு விலைக்கு கிடைப்பதால் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் வால்மார்ட்டில் வாங்கும் போது கவனம் தேவை என்று மெயிலில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் IIM ல் உள்ள 2$ ஜாப்பனீஸ் கடையில் விற்கப்படும் பல பொருட்களிலும் ஆபத்து உள்ளது. கவனம் மக்களே கவனம்.
மலிவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!


தங்கள் நண்பர்களுக்கும் இதைப்பற்றி தெரியப்படுத்தி காப்பாற்றுங்கள்!

நடுக்கடலில் சூரிய அஸ்தமனம்

2 கருத்துகள்
சூரிய உதயம் கண்டு அழகிய சிங்கப்பூரில் இறங்கி ஒருவாரம் தங்கி விசா வேலைகள் எல்லாம் முடித்து அடுத்த கட்ட பயணம் நாங்கள் இருக்கும் தீவை நோக்கி...

இந்த முறை எல்லாம் திட்டமிட்ட படியே நடந்தது. மாலை 6மணிக்கு ஃபெரி(ferry). இமிக்ரேஷன் எல்லாம் முடித்து ஃபெரியிலும் ஏறி உட்கார்ந்தாச்சு. குமரியில் அந்த குட்டிப்படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்றது மற்றும் உவரியில் என் தோழியின் குடும்பத்தோடு மீன்பிடிப் படகில் போட்டிங் சென்றதைத்தவிர கடலில் பயணம் செய்தது இல்லை. அந்தப்படகுகளை விட இது பெரிதாக வசதியாக இருந்தது. ஏதோ பஸ்ஸுக்குள் இருக்கும் உணர்வுதான். ஆனால் லேசாக ஆடிக்கொண்டே இருந்தது. இங்கேயும் ஓடிப்போய் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன் :-).

ஸ்டார் விர்கோ கப்பல். ஃபுல் வியூ எடுக்க முடியவில்லை :-(


செந்தோசா தீவுக்கு செல்லும் கேபிள் கார்


செந்தோசா தீவு


பால் நுரை தள்ளிக்கொண்டு ஃபெரி இலக்கை நோக்கி...


தூரத்தில் விடை கொடுக்கும் சிங்கப்பூர்


மெதுவாக ஃபெரி கிளம்பியது. வழியில் செந்தோசா தீவுக்கான கேபிள்கார் செந்தோசா தீவு, கடலோரத்தில் இருந்த வானுயர்ந்த கட்டிடங்கள் என்று பட்டிக்காட்டான் பட்டணம் பார்த்த கதையாக எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். கப்பலை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நான் 13மாடிகள் கொண்ட பெரிய ஸ்டார் விர்கோ கப்பலைப்பார்த்து திறந்த வாயை மூட சில நிமிடங்களானது. ரோட்டிலே செல்லும் போது வித விதமான கார்களைப் பார்ப்பது போல் கடலில் சென்றுகொண்டிருக்கும் வித விதமான கப்பல்களைக் காணமுடிந்தது. மிகப்பெரிய கட்டுமரம் போல இருந்தகப்பலில் மணலை நிரப்பி அதை இன்னொரு ஃபெரி இழுத்துக் கொண்டு போனது. எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே போன போது மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கியது.


ஆரஞ்சு வண்ணப் பெண் கடல் குளியலுக்கு தயாராக...


வெட்கத்தில் தீவின் பின்னே முகம் மறைத்து...



மீண்டும் தீவின் பின்னிருந்து மேகக்கூட்டங்களிடையே முகம் காட்டி சிரிக்கிறாள்


தூரத்தில் ஆரஞ்சு வண்ணப்பந்து ஒன்று கடலுக்குள் மெல்ல மெல்ல இறங்கி குளிக்கத் தொடங்கியிருந்தது. கடலில் பயணித்துக் கொண்டே அந்த சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க கொள்ளை அழகு. அதிலும் இடையிடயே ஏதேனும் தீவின் பின்னால் தன் முகம் மறைத்து மீண்டும் தன் பாதி முகம் காண்பித்து சிரிக்கும் ஆதவன் அழகோ அழகு.



இப்போதெல்லாம் முன்பு என்னை ஆச்சரியப்பட வைத்த மற்ற காட்சிகள் சலித்துப் போய் விட்டது. ஆனால் எத்தனை முறை கண்டாலும் மீண்டும் மீண்டும் காணவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காகவே எப்போது சிங்கை வந்தாலும் மாலை 6மணி ஃபெரியில்தான் எங்கள் ஊர் திரும்புவேன். ஆனாலும் சில நேரங்களில் மேகதேவன் என் ஆசையில் மேகத்தை அள்ளிப் தெளித்து விடுவார்

நடுவானில் சூரிய உதயம்

17 கருத்துகள்
குமரி மாவட்டத்தின் அழகான ஒரு சிறு கிராமம்தான் என் சொந்த ஊர். 8வயது வரை அந்த கிராமத்தில்தான் வளர்ந்தேன். பின்னர்தான் நகர வாழ்க்கை. அப்போது எப்போதாவது வானில் ஒரு விமானம் பறக்கும்சத்தம் கேட்டு விட்டால் போதும். எல்லா குழந்தைகளும் எங்கிருந்தாலும் தெருவிற்கு ஓடி வந்து அண்ணாந்து ஆ.... வென்று வாய் பிளந்து பார்த்து டாட்டா சொல்லுவோம். அப்போதெல்லாம் நானும் ஒருநாள் விமானத்தில் போவேன் என்று நினைத்ததில்லை. விமானத்தில் போனால் ஜன்னல் வழியாக கைநீட்டி மேகத்தைப் பிடித்து பையில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்ததுண்டு :-).

அப்படிபட்ட நான் விமானத்தில் ஏறும் நாளும் வந்தது. திருமணமாகி கணவரோடு பிறந்த வீட்டு புகுந்த வீட்டு சொந்தங்கள் புடை சூழ (சுமார் 20பேர்) எங்கள் ஊரில் இருந்து விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். அழுகையுடனான விடைபெறும் படலங்கள் முடிந்து செக் இன் செய்து லக்கேஜ்கள் எல்லாவற்றையும் உள்ளே போட்ட பின் அறிவிப்பு " சிங்கப்பூர் புறப்படுவானிருந்த சில்க் ஏர் விமானம் MI497 சாங்கேதிக ப்ரஸ்னன்ங்களால் வைகி புறப்படும். புறப்படானுள்ள சமயம் பீன்னிடு அறியிக்கப்படும்"(சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர் விமானம் தொழில்நுட்ப பிரச்சினையினால் தாமதமாக புறப்படும். புறப்படும் சமயம் பின்னர் அறிவிக்கப்படும்).
விமான நிறுவனத்தின் உபயத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் தரப்பட்டது. நாங்கள் விமான நிறுவனத்தின் வாகனத்தில் புறப்பட பின்னால் மூன்று கார்களில் எங்கள் சொந்தங்கள். இருவருக்கான அறையில் 20பேர் :-(. நாங்கள் இருவரும் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டோம். பின்னே 20பேருக்கு ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றால் யார் பில் கட்டுவது. எல்லாம் முடிந்து மீண்டும் விமான நிலையத்தை நோக்கி ஊர்வலம். மீண்டும் அழுகை படலம் முடிந்து ஒரு வழியாக மாலை 3.15க்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 1.45க்கு புறப்பட்டது.

ஃப்ளைட்டில் ஏறி உட்கார்ந்ததும் பெல்ட் எப்படி போடுவது என்று தெரியவில்லை. கணவரிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நமக்குத்தான் தன்மானம் ஜாஸ்தியாச்சே :-(.
அதான் சின்ன டி வியில் படம் போட்டு காண்பிப்பானே அதைப்பார்த்து போட்டிருக்க வேண்டியதுதானேன்னு எல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது. நாங்க அதையெல்லாம் பார்ப்போமா! நாங்க யாரு பட்டிக்காட்டு பரமேஸ்வரியாச்சே! பராக்கு பார்க்கறதுக்கே நேரம் பத்தாதே! ஒருவழியா பெல்ட் போட்டுக்கிட்ட மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டு பெல்ட்டை துப்பட்டாவால் மறைத்து வைத்துக் கொண்டேன். (அதில எல்லாம் விவரமா இருப்போம்ல). விமானம் டேக் ஆஃப் ஆன போதும் பெல்ட் போடவில்லை. இறங்கும் போதும் போடவில்லை. அவ்வளவு தைரியசாலியாக்கும் நான்.

அதிலும் இந்த சீன விமான பணிப்பெண்களின் ஆங்கிலம் ஒரு இளவும் புரியவில்லை. என்னை நினைத்து எனக்கு கேவலமாக இருந்தது. இதுங்க இங்கிலிபீசையே புரிஞ்சுக்க முடியலியே இதுல அங்க இருக்கறதுங்களோட இங்கிலிபீசை எப்படி சமாளிக்கிறது நாம காமடிப் பீசாயிடுவோமோன்னு ஒரே கிலிபிடிச்சுக்கிச்சு. இதையெல்லாம் யோசிச்சு முதலிலேயே கணவரிடம் ஒரு பிட்டை போட்டு வச்சிருந்தேன். புதுசா பார்க்கறவங்கக்கிட்ட நான் அவ்வளவாக பேசமாட்டேன் அப்படீன்னு அவருக்கு வார்னிங் கொடுத்துட்டேன். அதாவது புதுசு புதுசா யாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராதீங்கனு அர்த்தம்.

இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல அனுபவம் விமானத்தில் எனக்கு காத்திருந்தது. முதல் விமானப்பயணம் என்பதால் எனக்கு தூக்கம் வரவில்லை. அதிகாலையில் மெல்ல மெல்ல விடிய தொடங்கியிருந்தது. ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டே வந்தேன். தூரத்தில் தொடுவானிலொரு ஆரஞ்சுத்துண்டு கடலிலிருந்து மெல்ல எழும்பி வந்துக் கொண்டிருந்தது. ஆஹா...அத்தனை அழகு. மெல்ல மெல்ல மேலெழும்பி சூரியன் தன்னை சோம்பல் முறித்துக் கொண்டே வெளிவந்த அழகு காணக் கண்கோடி வேண்டும். குமரிக்கரையில் இருந்து காணும் சூரிய உதயம் ஒரு அழகு என்றால் வானில் விமானத்திலிருந்து காணும் சூரிய உதயம் வேறொரு அழகு.

புதிய இடத்தில் என் புதிய வாழ்க்கை தொடங்கப்போவதை அந்த சூரிய உதயம் எனக்கு உணர்த்தியதாக நினைத்தேன். சந்தோஷமாக இருந்தது.

அதன்பின் எத்தனையோ முறை விமானத்தில் பறந்தாலும் மறுபடியும் அந்த சூரிய உதயத்தை காணும் பாக்கியம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. மீண்டும் விமானம் தாமதமாக புறப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

என்ன படிச்சுக்கிட்டு ரொம்ப மொக்கையா தோணுதா?! மொக்கை போடுறதுதான எங்க வேலையே :-). இதுக்கே பயந்துட்டா எப்படி இன்னும் ஒரு கடல் பயணத்தையும் தாண்டித்தானே நான் இருக்கும் இடத்தை அடைய முடியும். அதுக்கும் ஒரு பதிவு நடுக்கடலில் ஒரு சூரிய அஸ்தமனம் என்று இதுக்கு பார்ட் 2 போடுவோம்ல. அதையும் நீங்கதானே படிக்கணும் :-)

அன்புடன்
கவிசிவா

கேட்கக்கூடாத கேள்விகள்

0 கருத்துகள்
சமீபத்தில் வாரமலர் அந்துமணியின் பா கே ப பகுதியில் வந்த ஒரு கடிதம் படிக்க நேர்ந்தது. திருமண வயது தாண்டியும் ஏதேதோ காரணங்களால் திருமணமாகாத பெண்ணிடம் கேட்கப்படும் கேள்விகள் பற்றி ஒரு வாசகியின் குமுறல் பற்றியது. இதற்கு பலவித கருத்துக்கள் அப்பக்கத்தில் பதியப்பட்டிருந்தன. அதில் ஒருவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படுவது நல்லதுதான். அப்போதுதான் நாம் திருமண முயற்சி எடுப்போம். அதுபோல் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விகள் கேட்கப்படுவதையும் சரியென்றே கருத்து சொல்லியிருந்தார். சிலர் இதை ஆதரிக்கவும் செய்திருந்தனர்.

என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதுபோல் பல கேட்கக்கூடாத நாகரீகமற்ற கேள்விகளை சிலர் ஜஸ்ட் லைக் தட் கேட்டு மற்றவர்களை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குகின்றனர்.

அப்படி சில கேட்கக்கூடாத கேள்விகள் சில

கல்லூரிப்படிப்பை அப்போதுதான் முடித்திருக்கும் இளைஞர்களிடம்

கேம்பஸ் இண்டர்வியூவில் எதும் கிடைக்கலியா? (கேட்பவர் ஏதோ படித்து போது நான்கைந்து கம்பெனிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவர் என்பது போல)
இன்னும் சும்மாதான் இருக்கறியா? ( இவர் என்னவோ ரொம்பவும் வேலை செய்து சம்பாதிப்பவர் போல)

திருமணமாகாதவர்களிடம்

எப்போ சாப்பாடு போடப் போற? (வீட்டில் இவனுங்களுக்கெல்லாம் சாப்பாடு போடவே மாட்டாங்க போல அதான் ஊரில் எவனாவது சாப்பாடு போட மாட்டானான்னு அலையுதுங்க)

திருமணமானவர்களிடம்

இன்னும் விஷேஷம் ஒன்னும் இல்லியா? (விஷேஷம் இருந்தாதான் பத்து மாதம் கழித்து தெரியுமே அதுக்கு முன்னாடி என்ன அவசரம்?)

இப்படியே ஜாலியா சுத்தினா போதுமா புள்ளகுட்டி ஒன்னும் வேண்டாமா? (தன்னால ஜாலியா சுத்த முடியலேன்னு வயித்தெரிச்சல்)

குழந்தை இல்லாதவர்களிடம்

வீட்டில் தனியா எப்படி இருக்கறீங்க? எப்படி பொழுது போகுது? (கேட்பவர்கள் மிஞ்சிப்போனா வீட்டிலிருந்து அழுகை சீரியலைப்பார்ப்பர்கள் இல்லையென்றால் அடுத்தவரைப்பற்றி ஏதும் கமெண்ட் அடிப்பார்கள். தங்களைப்பற்றி மற்றவரும் கமெண்ட் செய்வார்களே என்ற எண்ணம் துளி கூட இவர்களுக்கு இருக்காது. அவ்வளவு தன்னம்பிக்கை)

நீ அந்த டாக்டரைப் பாரேன் இந்த கோவிலுக்கு போயேன் அந்த பரிகாரத்தை செய்யேன் என்று கேட்காமலேயே அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள். (இதையெல்லாம் பற்றி அந்த தம்பதிகளும் குடும்பத்தினரும் யோசிக்காமலா இருப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இருக்காதா). அவர்கள் கேட்டாலன்றி இதுபோன்ற அறிவுரைகளை தவிர்ப்பதே நலம். அனுபவத்தில் சொல்கிறேன். இப்படி கேட்காமலேயே கிடைக்கும் அறிவுரைகள் மிகவும் சங்கடப்படுத்தும்.

தாங்கள் குழந்தை பெற்றுக் கொண்டதை ஏதோ உலக மகா சாதனை போல் பீற்றுவார்கள். குழந்தைகள் ஈடில்லா செல்வம்தான். மறுப்பேதும் இல்லை. ஆனால் அவ்வரம் கிடைக்காதவர்களை இவ்வுலகில் வாழவே லாயக்கில்லாதவர்கள் என்ற ரீதியில் சிலர் பேசுவார்கள். குழந்தை இருப்பவர்கள்தான் வாழ்வில் ஏதோ லட்சியத்தோடு வாழ்வதாகவும் மற்றவருக்கு அப்படிப்பட்ட லட்சியங்கள் இருக்காது என்று பேசும் பலரைப் பார்த்து நொந்து நூலாகிவிட்டேன்.

குழந்தைகளிடம்

நீ ஏன் இவ்வளவு கருப்பா இருக்கற? உன் அக்கா நல்ல சிவப்பா இருக்கறாளே! (இவர் என்னவோ ரொம்ப வெள்ளை என்பது போல)
குழந்தைகளிடம் இப்படி கேட்பவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும்.

ஓஹ் நீ செகண்ட் ரேன்க்தான் வாங்குவியா? என் பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட்தான் (போய் ரிப்போர்ட் கார்டை வாங்கியா பார்க்கப்போகிறோம்ங்கற தைரியம்) அப்போ யார்தாண்டா செகண்ட் தேர்ட் எல்லாம் வாங்கறது

நம் நண்பர்கள் யாரும் இப்படியெல்லாம் கேட்கமாட்டீர்கள்தானே! ஆனால் இப்படி கேட்பவர்களைக் கண்டால் நல்லா நடுமண்டையில் நச்சுன்னு ஒரு குட்டு வைங்க சரியா?!

பாரத விலாஸ் மீண்டும்?!

0 கருத்துகள்
இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் சிறுவயது மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மனது ஏங்குகிறது.

சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்... நாங்கள் அப்போது மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த காம்பவுண்டில் மொத்தம் நான்கு வீடுகள். ஒரு இந்து குடும்பம் ஒரு க்றிஸ்தவ குடும்பம் ஒரு முஸ்லீம் குடும்பம் மற்றும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம். அத்தனை பேரும் அத்தனை ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தோம். தீபாவளி அன்று எங்கள் வீட்டில்தான் அத்தனை பேருக்கும் சாப்பாடு. க்றிஸ்துமஸ் அன்று க்றிஸ்தவர்கள் வீட்டில்தான் நாங்கள் மொத்தம் பேரும் இருப்போம். சர்ச்சுக்கு எல்லோரும் போவோம். நோன்பு மாதம் வந்து விட்டால் குழந்தைகள் எங்களுக்கு கொண்டாட்டம்தான். தினமும் நோன்பு திறப்பதற்கு எல்லா குழந்தைகளும் ஆஜராகி விடுவோம். ரம்ஜான் அன்று எல்லோரும் பள்ளிவாசலுக்கு செல்வோம் அதுவும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு. அன்று எங்களை யாரும் தடுக்கவில்லை. மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டார்கள். அது போல் அவர்களும் எங்களோடு கோவிலுக்கு வருவார்கள். எந்த வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக சந்தோஷமாக இருந்தோம். எங்கள் காம்பவுண்டுக்கு பாரத விலாஸ் என்று நாங்களே பெருமையாக பெயர் வைத்துக் கொண்டோம்.

10வருடங்கள் முன்பு கல்லூரியில் படித்த போது ஒரு அனுபவம். அவர் என் மிக நெருங்கிய தோழி. எல்லோரும் கல்வி சுற்றுலா சென்ற போது மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று திரும்பும் போது நான் வாங்கிய அம்பாளின் படம் ஒன்றை அந்த நெருங்கிய தோழியின் பெட்டியில் வைக்க கொடுத்தேன் (என்னுடைய பையில் வைத்தால் கசங்கிவிடும் அவரது பெட்டியில் விரித்து வைக்கலாம் என்பதால்). கையில் கூட வாங்க மறுத்து இந்து கடவுளின் படத்தை வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார் (அவர் இன்னொரு மதத்தை பின்பற்றுபவர்). எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. மத வேறுபாட்டை முதன் முதலில் நான் உணர்ந்த நாள் அது. ஆனாலும் சரி இது அவரது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று விட்டு விட்டேன். ஆனால் மற்றொரு அவரது மதத்தை சார்ந்த தோழி அப்படத்தை தன் பெட்டியில் வைத்துக் கொள்ள முன் வந்த போது அதையும் தடுத்தபோது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் சண்டை போடவில்லை. அவர் வளர்ந்த சூழல் அப்படிப்பட்டதாயிருக்கும் என்று விட்டு விட்டேன்.

கல்லூரி விடுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த போதுதான் மதம் என்பது எப்படி ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக ஓடியிருக்கிறது என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் என் மற்றொரு தோழி எனக்கு சிறிது ஆறுதல் அளித்தார். அவரும் என்னைப்போலவேதான் வேற்று மதத்தவர் என்றாலும் என்னோடு கோவிலுக்கும் வருவாள். நானும் அவளோடு சர்ச்சுக்குப் போவேன். அவளுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தன் வகுப்பில் படிக்கும் மாணவனைப் பற்றி பேசும் போது முதலில் அவனின் பெயரைச் சொல்லிவிட்டு அவர் வேறொரு மதத்தை சார்ந்தவராக இருந்தால் அதையும் சேர்த்தே சொல்கிறார்கள் (நான் சந்தித்த பெரும்பான்மையான மாணவர்கள்). இன்று குழந்தைகள் மனதில் கூட மதம் படிய ஆரம்பித்து விட்டது.

இனி வரும் காலத்திலாவது இந்த வேறுபாடுகள் மறைந்து என் பழைய பாரத விலாஸ் மீண்டும் கிடைக்குமா? நாம் அனைவரும் மனது வைத்தால் இது நடக்கும். வைப்போமா?!



ஏக்கத்துடன்
கவிசிவா

நானும் ப்ளாகர் ஆயிட்டேன்!!!

5 கருத்துகள்
வலைப்பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.வலைப்பூவில் புதிதாக துளிர்த்திருக்கும் மொட்டு நான். நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளை இவ்வளவு நாளும் அமைதியாக வாசித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். என் மன உணர்வுகளையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் தொடர்ந்து என்னால் எழுத முடியுமா என்ற தயக்கத்திலேயே தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். இப்போது துணிந்து இறங்கி விட்டேன் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் இருப்பீர்கள்தானே!

அன்புடன்
கவிசிவா